லண்டன்: கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டு (Ilford) பகுதியில், குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடி ஜன்னல் விளிம்பைப் பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமி ஒருவரை, இந்திய வாலிபர் ஒருவர் லாவகமாகப் பிடித்துக் காப்பாற்றியுள்ளார். பதறவைக்கும் இந்த மீட்புக்காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
இல்ஃபோர்டு ஹை ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள குடியிருப்பு ஜன்னலுக்கு வெளியே, சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து, அதன் விளிம்பை மட்டும் கைகளால் பிடித்துத் தொங்கியுள்ளார்.
9 நிமிடப் போராட்டம் – பதறிய பொதுமக்கள்
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீதியில் சென்ற பொதுமக்கள் அனைவரும் கீழே கூடினர். சிறுமி எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற ஆபத்தான நிலையில், சுமார் 9 நிமிடங்களுக்கும் மேலாக ஜன்னல் விளிம்பை டிட்டமாகப் பிடித்துக் கொண்டு தொங்கியுள்ளார்.
கீழே இருந்தவர்கள் தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு அவசரத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெட்ரோபாலிட்டன் போலீஸ் அதிகாரி ஒருவர், சிறுமி விழும் பகுதிக்குக் கீழே தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
“கிரிக்கெட் விளையாடிய அனுபவம் கை கொடுத்தது”
அதே நேரத்தில், அந்தப் பகுதியில் உணவக மேலாளராகப் பணியாற்றி வரும் இந்திய வாலிபரான முகமது ஜெசில் (Mohamed Jesil – கேரளா) என்பவர், சற்றும் யோசிக்காமல் உடனடியாகக் கட்டிடத்தின் கூரை வழியாக ஏறி, போலீஸ் அதிகாரி நின்ற பகுதிக்கு வந்து சேர்ந்தார்.
அடுத்த சில வினாடிகளில் சிறுமியின் பிடி தளர்ந்து அவர் மேலிருந்து கீழே விழுந்தார். அப்போது கீழே நின்ற முகமது ஜெசில், சிறுமியைத் தனது இரு கைகளாலும் மிகத் துல்லியமாக ஏந்திக் (Catch) காப்பாற்றினார். அருகில் நின்ற போலீஸ் அதிகாரியும் சிறுமியின் வேகம் மற்றும் எடையைச் சமநிலைப்படுத்தி, ஜெசில் கீழே விழாமல் இருக்கத் தாங்கிப் பிடித்தார். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டவுடன் வீதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“நான் ஹீரோ அல்ல, ஒரு தந்தை!”
சமூக வலைதளங்களில் ‘ரியல் ஹீரோ’ எனப் பாராட்டப்பட்டு வரும் முகமது ஜெசில் இதுகுறித்துப் பேசுகையில்:
“நான் இதைச் செய்யும்போது எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. எனக்கு 5 மாதமே ஆன இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். ஒரு தந்தையாக அந்தச் சிறுமி ஆபத்தில் இருப்பதைப் பார்த்ததும் என் உள்ளுணர்வு என்னைத் தூண்டியது, ஓடிச் சென்று காப்பாற்றினேன்.
நான் இந்தியாவில் இருந்தபோது அதிகளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அந்த கிரிக்கெட் விளையாடிய வேகமும், பந்தைப் பிடிக்கும் திறனும் (Reflexes & Catching skills) தான் அந்தச் சரியான நொடியில் சிறுமியைத் தவறவிடாமல் லாவகமாகப் பிடிக்க எனக்குப் பெரிதும் உதவியது. மீட்கப்பட்டதும் அந்தச் சிறுமி என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தாள், அது என் வாழ்நாளின் மறக்க முடியாத நிம்மதியான தருணம்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நல்வாய்ப்பாகச் சிறுமிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. தனது மகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய வாலிபர் முகமது ஜெசிலுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர். ஆபத்தான நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு ஒரு மழலையின் உயிரைக் காத்த இந்திய வாலிபருக்கு இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

