நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பிரபலமான வானளாவிய கட்டிடங்களில் ஒன்றான ‘எம்பயர் ஸ்டேட் பில்டிங்’ (Empire State Building) உச்சிக்கு, எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறி, காதலை வெளிப்படுத்திய ரஷ்ய ஜோடியின் சாகசம் தற்பொழுது சர்வதேச அளவில் சமூக வலைதளங்களை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.
காதலுக்காகவும், உலக அமைதிக்கான செய்தியை உரக்கச் சொல்வதற்காகவும் சுமார் 1,454 அடி (443 மீட்டர்) உயரத்தில் மரண விளிம்பில் நின்றபடி இந்த ஜோடி நிகழ்த்திய ஆபத்தான காதல் முன்மொழிவு (Marriage Proposal) இறுதியில் கைதில் முடிந்துள்ளது.
யார் இந்த தில் ஜோடி?
இந்த விசித்திரச் சாகசத்தை நிகழ்த்தியவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த ஏஞ்சலா நிக்கோலாவ் (Angela Nikolau – 33) மற்றும் இவான் பீர்கஸ் (Ivan Beerkus / Ivan Kuznetsov – 32) என்ற காதலர்கள் ஆவர். இவர்கள் இருவருமே எவ்வித கயிறுகளும் இன்றி உலகின் மிக உயரமான கட்டிடங்களின் உச்சிக்கு ஏறும் ‘ஸ்கைவாக்கர்ஸ்’ (Skywalkers) அல்லது ‘ரூஃப்டாப்பர்ஸ்’ (Rooftoppers) என்று அழைக்கப்படும் ஆபத்தான சாகசக் கலைஞர்கள் ஆவர். இவர்களின் காதல் மற்றும் சாகசப் பயணத்தை மையமாக வைத்து கடந்த 2024-ல் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளம் ஒரு ஆவணப்படத்தையே வெளியிட்டிருந்தது.
1,454 அடி உயரத்தில் நிகழ்ந்த அதிசயம்:
நேற்று மதியம், நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் பொது மக்கள் பார்க்கும் தளத்தைத் தாண்டி, யாருக்கும் அனுமதியில்லாத 102-வது மாடியில் உள்ள மிகக் குறுகிய வான் அலைவரிசைக் கோபுரத்தின் (Antenna Spire) உச்சிக்கு இந்த ஜோடி ரகசியமாக நுழைந்து ஏறியுள்ளனர்.
- உலக அமைதி பேனர்: முகமூடி மற்றும் கருப்பு உடை அணிந்திருந்த இந்த ஜோடி, 1,454 அடி உயரத்தில், பலத்த காற்று வீசும் வான்வெளியில் நின்றபடி ஒரு பெரிய கருப்பு பேனரை விரித்தனர். அதில், “அதிகாரத்தின் மீதான காதலை விட, காதலின் சக்தி எப்போது மேலோங்குகிறதோ, அப்போது உலகம் அமைதியை அறியும்” (When the power of love beats the love of power the world knows peace) என்ற உலக அமைதிக்கான வாசகம் எழுதப்பட்டிருந்தது.
- நெஞ்சை உலுக்கிய காதல் ப்ரொபோசல்: பேனரைக் காட்டிய பிறகு, அந்த அசாத்திய உயரத்தில் இவான் பீர்கஸ் திடீரென ஒரு காலில் மண்டியிட்டு ஏஞ்சலாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி, திருமண நிச்சயம் செய்வதற்கான மோதிரத்தை நீட்டினார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஏஞ்சலா அவரைக்கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இந்த காட்சிகள் ஹெலிகாப்டர் மூலம் வீடியோவாகப் பதிவாகி உலகையே வியக்க வைத்துள்ளது.
காதல் ஜோடிக்குக் காத்திருந்த போலீஸ் அதிரடி:
இந்த சாகசம் ஒருபுறம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு விதிகளை மீறியதால் நியூயார்க் நகர போலீசாரின் அவசரக் கால மீட்புப் படையினர் (NYPD Emergency Services Unit) உடனடியாகக் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றனர்.
போலீசார் அங்கு சென்றபோது, இருவரும் மிகவும் நிதானமாக, “நாங்கள் இருவருக்கும் நிச்சயம் ஆகிவிட்டது” என்று புன்னகையுடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் பத்திரமாக கீழே இறக்கிய போலீசார், அத்துமீறி நுழைதல் (Burglary), ஆபத்தான முறையில் பொதுமக்களை அச்சுறுத்துதல் (Reckreckless Endangerment), மற்றும் குற்றவியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
“எங்கள் கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமாக $1,000 கட்டணத்தில் காதல் ஜோடிகள் ப்ரொபோஸ் செய்யத் தனி பேக்கேஜ் உள்ளது. எஃப்.பி.ஐ மற்றும் போலீஸ் கேஸ் இல்லாமல் நியூயார்க்கின் சிறந்த அழகை ரசிக்க டிக்கெட் வாங்கி வரலாம்” என்று எம்பயர் ஸ்டேட் பில்டிங் நிர்வாகம் இந்த ஜோடியை நக்கலாக ட்விட்டரில் சாடியுள்ளது. காதலுக்காகவும், தங்களின் கொள்கைக்காகவும் மரண பயத்தைத் தூக்கியெறிந்த இந்த ஜோடியின் வீடியோ தற்பொழுது உலகளவில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

