சென்னை: அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரகதம் குமரவேல் தலைமையில் சந்திப்பு:
மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில், அதிமுகவிலிருந்து அண்மையில் ராஜினாமா செய்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். சென்னை தவெக தலைமை அலுவலக வட்டாரத்தில் நடந்த இந்தத் திடீர் சந்திப்பு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
‘முதலமைச்சர்’ விஜய் முன்னிலையில் இணையத் திட்டம்?:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் முன்னிலையில், இந்த 3 முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் விரைவில் தங்களை தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப் போவதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், மாற்றுக்கட்சிகளில் இருந்து வலுவான நிர்வாகிகள் தவெக நோக்கி வருவது அக்கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
அதிமுகவிற்கு பின்னடைவா?:
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் செல்வாக்கு மிக்க நிர்வாகியாக வலம் வந்த மரகதம் குமரவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெக-வில் இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு மற்றும் அடுத்தகட்ட இணைப்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

