டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் பார் உரிமங்கள் வழங்குதல், போக்குவரத்து டெண்டர்கள் மற்றும் மதுபானப் பாட்டில்கள் கொள்முதலில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு மற்றும் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாகச் (A1) சேர்க்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்கு பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட மொத்தம் 7 பேர் மீது முதன்மைத் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
FIR-ல் இடம்பெற்றுள்ள 7 நபர்களின் விவரம்:
- V. செந்தில் பாலாஜி – முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் (A1)
- S. விசாகன், IAS – டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் (Ex-MD)
- R. ராமதுரை முருகன் – டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர்
- R. பன்னீர்செல்வம் – டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர்
- பாஸ்கர் – செந்தில் பாலாஜியின் முன்னாள் நேர்முக உதவியாளர் (Ex-PA)
- ரதேஷ் ராஜ் சண்முகவேல் – தனியார் இடைத்தரகர் / உதவியாளர்
- S. கார்த்திக் (மூலனூர் கார்த்திக்) – தனியார் நபர்
FIR-ல் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:
- பார் டெண்டர் முறைகேடு: கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விதிகளை மீறி, முறைகேடான முறையில் குறிப்பிட்ட நபர் குழுக்களுக்கு (Cartelization) பார் உரிமங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு.
- MRP-ஐ விடக் கூடுதல் விலை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு (MRP-ஐ விட ₹10 முதல் ₹500 வரை கூடுதலாக) விற்பனை செய்து சட்டவிரோதப் பணம் திரட்டியது.
- மதுபான ஆலைகளின் கமிஷன்: தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு சலுகைகள் மற்றும் கொள்முதல் ஆர்டர்களை வழங்கியது.
- போக்குவரத்து டெண்டர் ஊழல்: டாஸ்மாக் கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர்களில் வைப்புத் தொகை (EMD) காசோலைகளைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடு செய்தது.

