சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தான் நடிகர் ஆவதற்கு முன்பு தன் வாழ்க்கையில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் எவ்வாறு தன்னை ஆழமாகப் பாதித்தது என்பது குறித்தும், தன் சினிமா பயணத்தின் திருப்புமுனை பற்றியும் மனம் திறந்துள்ளார்.

அமைச்சர் பேசிய வார்த்தைகள்!

சூர்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைந்த புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், “நான் நடிகர் ஆவேன் என்று நடிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை எனக்குத் தெரியாது. அப்பாவின் (சிவகுமார்) நடிப்புத் திறமை என்பது எல்லோருக்கும் அறிந்ததே. ஆனால் என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஒருவருடைய குடும்பத் திருமணத்திற்காக அவருடைய உறவினரான ஒரு அமைச்சரைச் சந்தித்து பத்திரிகை கொடுக்கச் சென்றோம். நானும் அவருடன் சென்றிருந்தேன்.

அப்போது அந்த அமைச்சர் என்னை அருகில் அழைத்து விசாரித்தார். அது நான் நடிக்கத் தொடங்கிய புதிய காலம். அப்போது அவர், ‘ஓ… நீ பார்ப்பதற்கு சிவகுமார் போலவே இருக்கிறாய்; அவர் எப்படி நடிப்பாரோ அதே போல்தானே நீயும் நடிப்பாய் அல்லவா? நாங்கள் மீண்டும் அதையே பார்க்க வேண்டும். ஒரு விஷயம் தானே…’ என்பது போல சாதாரணமாகப் பேசினார்.”

என்னை ‘Trigger’ செய்த தருணம்!

தொடர்ந்து பேசிய சூர்யா, அந்த அமைச்சரின் அந்த வார்த்தைகள் தன் மனதை ஆழமாகப் பாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் அப்படிப் பேசியது என்னை மிகவும் ‘Trigger’ செய்தது. என் தந்தை செய்ததையோ அல்லது அவரது சாயலையோ அப்படியே பின்பற்றிவிட்டுப் போக நான் வரவில்லை. எனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை (Own Identity) உருவாக்க வேண்டும் என்ற வெறியை அந்தச் சம்பவம் எனக்குத் தந்தது. அதன் பிறகே என் தந்தையின் படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, சினிமா உலகத்தில் எனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்க தீவிரமாக உழைக்கத் தொடங்கினேன்” என்று சூர்யா அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version