கயா, ஜூன் 6:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவரது வங்கி கணக்கில் திடீரென ரூ. 294.80 கோடி வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன? கயா மாவட்டத்தின் போத்கயா பகுதியைச் சேர்ந்த விகாஸ் குமார், ஒரு எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பராகப் பணியாற்றி வருகிறார். மாதம் ரூ. 10,000 முதல் 12,000 வரை மட்டுமே வருமானம் ஈட்டும் இவருக்கு, ஜூன் 4-ம் தேதி தனது ‘ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி’ கணக்கைச் சரிபார்த்தபோது, அதில் ரூ. 94 கோடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் சரிபார்த்தபோது, அந்தத் தொகை ரூ. 294.80 கோடியாக அதிகரித்திருந்தது.

முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்ட விகாஸ்: தனது ஐந்து வருட வங்கி வரலாற்றில் இதுவரை ரூ. 6 முதல் 7 லட்சம் மட்டுமே பரிவர்த்தனை செய்துள்ள விகாஸ், இவ்வளவு பெரிய தொகையைக் கண்டு குழப்பமடைந்தார். தொழில்நுட்பக் கோளாறோ அல்லது ஏதேனும் மோசடியோ என்று அஞ்சிய அவர், அந்தப் பணத்தில் இருந்து ஒரு ரூபாயைக் கூட எடுக்கவில்லை. உடனடியாக இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும், சைபர் கிரைம் பிரிவு மற்றும் போத்கயா காவல் நிலையத்திற்கும் முறையான புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணை: இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “இது ஒரு முக்கியமான நிதி சார்ந்த விவகாரம். வங்கியின் சர்வர் பதிவுகள், பரிவர்த்தனை ஐடிகள் (Transaction IDs) மற்றும் கணக்கு விவரங்களை வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தொழில்நுட்பக் கோளாறால் இது நடந்ததா அல்லது வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது விரைவில் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், சாதாரணத் தொழிலாளியின் கணக்கில் இத்தனை கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version