கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே, ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியின் காரை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வண்டல் மண் எடுக்கத் தடை? கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த நாரை ஏரியில், விவசாயிகள் தங்களது விவசாய நில மேம்பாட்டிற்காக அரசு விதிமுறைகளின்படி வண்டல் மண் எடுத்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி, வண்டல் மண் எடுக்க வேண்டுமென்றால் தங்களுக்குப் பணம் தர வேண்டும் என விவசாயிகளிடம் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டல்: வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் தவெக நிர்வாகி தரப்பில் ரூ. 1 லட்சம் வரை லஞ்சமாகக் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் டிராக்டர் ஓட்டுநர்கள், அந்த நிர்வாகி வந்த காரை நடுவழியில் மறித்து அதிரடியாக முற்றுகையிட்டனர்.

காரைச் சுற்றிய வளைத்த விவசாயிகள், அந்த தவெக நிர்வாகியிடம் மிக ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கொந்தளிப்பு: “விஜய் கட்சியில இருந்து எங்களை நிம்மதியா வேலை செய்ய விடாம தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிட்டே இருக்காங்க. இது சாதாரண விஷயம் இல்ல, உடனடியாக முதலமைச்சரின் காதுக்கு இந்த அநியாயம் போய் ஆகணும்” என விவசாயிகள் அங்கிருந்த அதிகாரிகளிடமும் செய்தியாளர்களிடமும் கண்ணீருடன் முறையிட்டனர்.

பரபரக்கும் அரசியல் களம்: கட்சி நிர்வாகி ஒருவர் ஏழை விவசாயிகளிடம் மண் எடுக்கப் பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டும், கார் முற்றுகையிடப்பட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version