போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி வாகன ஓட்டிகளைக் குறிவைத்து, இ-சலான் (e-Challan) பெயரில் அபராதப் பணம் பறிக்கும் புதிய ஆன்லைன் மோசடி குறித்து தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி நடக்கும் விதம்: உங்கள் மொபைல் எண்ணிற்கு, “நீங்கள் போக்குவரத்து விதியை மீறிவிட்டீர்கள்; அதற்கான அபராதத் தொகையை உடனே செலுத்துங்கள்” என்று கூறி எஸ்எம்எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி வரும். அதோடு, அபராதத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனக் கூறி ஒரு லிங்க் (Link) அல்லது ஒரு ஆண்ட்ராய்டு செயலி கோப்பு (.APK file) அனுப்பப்படும்.

அவசரத்தில் பதற்றமடையும் வாகன ஓட்டிகள் அந்த லிங்க்கை கிளிக் செய்தாலோ அல்லது அந்த போலிச் செயலியை மொபைலில் இன்ஸ்டால் செய்தாலோ, அவர்களின் மொபைல் போன் மொத்தமாக மோசடி கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். இதன் மூலம் வங்கிக் கணக்கு விபரங்கள் திருடப்பட்டு, ஓடிபி (OTP) இல்லாமலேயே பணம் திருடப்படும் அபாயம் உள்ளது.

பாதுகாப்பாக இருக்க சைபர் கிரைம் தரும் வழிகாட்டுதல்கள்:

  • தெரியாத லிங்க்குகளைத் தவிர்க்கவும்: உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் இருக்கும் அடையாளம் தெரியாத இணையத் தொடுப்புகளை (Unknown Links) ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.
  • போலி செயலிகளைத் தவிர்க்கவும்: வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் யாராவது அனுப்பும் .APK ஃபைல்களை (APKs) எப்போதும் மொபைலில் இன்ஸ்டால் செய்யக் கூடாது.
  • அதிகாரப்பூர்வ தளம் மட்டுமே: உங்களது வாகனத்தின் மீது உண்மையாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ போக்குவரத்து இணையதளமான https://echallan.parivahan.gov.in/ என்ற தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழந்தால், தாமதிக்காமல் முதல் 24 மணி நேரத்திற்குள் செயல்படுவது அவசியமாகும்.

📞 உடனடி உதவிக்கு: சைபர் மோசடியால் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகப் புகாரைப் பதிவு செய்யலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version