புதுடெல்லி: இந்தியாவில் சில வகை இருமல் மருந்துகள் (Cough Syrups) மற்றும் திரவ வடிவ டானிக்குகளில் ஆல்கஹால் கலந்திருப்பதால், அவை போதைக்காகவும் தவறான வழிகளிலும் பயன்படுத்தப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டு, மத்திய சுகாதார அமைச்சகம் ‘1945 ஆம் ஆண்டின் மருந்து விதிகளில்’ திருத்தம் மேற்கொண்டு, “மருந்துகள் (5-வது திருத்த) விதிகள், 2026” (Drugs (Fifth Amendment) Rules, 2026) என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் (Gazette) அறிவிப்பின்படி நடைமுறைக்கு வந்துள்ள முக்கிய மாற்றங்கள்:
- ‘அட்டவணை எச்1’ (Schedule H1) பிரிவுக்கு மாற்றம்: 12 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் எத்தில் ஆல்கஹால் (Ethyl Alcohol) கொண்டு, 30 மில்லி மீட்டருக்கும் (ml) அதிகமான கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் விற்கப்படும் அனைத்து வாய்வழி திரவ மருந்துகளும் இனி ‘அட்டவணை எச்1’ பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
- அட்டவணை K-விலிருந்து ‘சிரப்’ நீக்கம்: இதுவரை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி சாதாரண மருத்துவப் பொருட்களின் வரிசையில் (Over-The-Counter – OTC) விற்க அனுமதிக்கப்பட்டு வந்த ‘சிரப்ஸ்’ (Syrups) என்ற வார்த்தை, விதிவிலக்குகள் அளிக்கும் ‘அட்டவணை K’ பிரிவிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகள்:
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களும் (Pharmacies) இனி பின்வரும் விதிகக்ளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்:
- பரிந்துரைச் சீட்டு (Prescription) கட்டாயம்: பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் தகுந்த பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த ஆல்கஹால் கலந்த மருந்துகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யக் கூடாது.
- 3 ஆண்டுகள் பதிவேடு பராமரிப்பு: இந்த வகை மருந்துகள் யாருக்கு, எந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் விற்கப்பட்டது என்ற விவரங்களை ஒரு தனிப் பதிவேட்டில் (Register) மருந்தகங்கள் குறிக்க வேண்டும். மேலும், அந்தத் தரவுகளை 3 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசு விளக்கம்: “இந்த புதிய கட்டுப்பாடுகள் என்பது குறிப்பிட்ட மருந்துகள் பாதுகாப்பற்றவை என்றோ அல்லது தடை செய்யப்பட்டவை என்றோ அர்த்தமல்ல. உரிய மருத்துவ மேற்பார்வையின்றி இவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், விநியோக முறையைக் கண்காணிக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனச் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய விதியின் மூலம் போதைக்காக இருமல் மருந்துகளைப் பயன்படுத்தும் சட்டவிரோத பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


