சென்னை:
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்வதாகவும், ஆளுங்கட்சிக்குச் சாதகமான பகுதிகளை மட்டுமே எடிட் செய்து வெளியிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டமன்ற நேரலை விவகாரம்:
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், அதன் நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாகச் சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“சட்டமன்றக் கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்வோம் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று நேரலையில் ஒளிபரப்பப்பட்ட உடனே, அந்த ஃபீட் (Live Feed) திடீரென துண்டிக்கப்பட்டது. ஆளுநர் உரை மீதான விவாதங்கள் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலாக, த.வெ.க. அமைச்சர்களின் பேச்சுகளை மட்டும் எடிட் செய்து, ஆளுங்கட்சிக்குச் சாதகமான வீடியோக்கள் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் முற்றிலும் தணிக்கை செய்யப்படுகின்றன. ஊடகங்களுக்குத் தன்னிச்சையான தகவல்களை மறுத்து, ‘நாங்கள் தருவதை மட்டுமே நீங்கள் ஒளிபரப்ப வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துவது அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும்.”
உதயநிதி கேள்வி:
தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘மாற்றம்’ என்று முழக்கமிட்டு ஆட்சியைப் பிடித்த த.வெ.க., மக்கள் பிரதிநிதிகளின் குரலை ஒடுக்குவதுதான் அந்த மாற்றமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திங்கட்கிழமை அன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்க உள்ளதால், அதற்குள் சட்டமன்ற நேரலையை உடனடியாகத் தொடர சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற நேரலை விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

