தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கையை (2026-27) நிதியமைச்சர் என். மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு மொத்தம் ரூ. 9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்யேகத் திட்டங்களும், அவற்றுக்கான நிதி விவரங்களும்:

1. ‘அண்ணனின் சீர்’ திட்டம் (திருமண உதவி)

  • அம்சங்கள்: தகுதியான பெண்களுக்குத் திருமண நன்னாளில் அரசு சார்பில் 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். பெண்களின் திருமணத் தொடக்க காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • நிதி ஒதுக்கீடு: இத்திட்டத்திற்கு ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டம்

  • அம்சங்கள்: கிராமப்புற மற்றும் விளிம்பு நிலைப் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படவுள்ளன.
  • நிதி ஒதுக்கீடு: இத்திட்டத்திற்காக ரூ. 110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

3. ‘தாய் கேர்’ (Thai Care) திட்டம்

  • அம்சங்கள்: கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். மகப்பேறு காலம் நெருங்கும் வேளையில் பெண்கள் இங்கு தங்கிப் பயன்பெறலாம்; இவர்களுக்குக் கட்டணமில்லாமல் உணவு, மருத்துவ உதவிகள் மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படும்.
  • நிதி ஒதுக்கீடு: மொத்தம் ரூ. 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. ‘சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ & சுய உதவிக் குழுக்கள்

  • அம்சங்கள்: பெண்களின் சுயதொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக, பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மேலும், சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ. 38,000 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு: பெண்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு’ ரூ. 354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. ‘மண்ணின் மகள்’ திட்டம்

  • அம்சங்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிலம் வாங்கும் போது முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுவதோடு, நவீன தொழில்நுட்ப விவசாயப் பயிற்சியும் அளிக்கப்படும்.
  • நிதி ஒதுக்கீடு: இப்பயிற்சிகளுக்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version