தெளிவான சுற்றறிக்கை வெளியிட்ட பதிவுத்துறை தலைவருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி
தமிழ்நாடு பதிவுத்துறையின் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ்., அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டி மதிப்பு மற்றும் சொத்து பதிவு நடைமுறைகள் தொடர்பான தெளிவுரை சுற்றறிக்கை, பதிவுத்துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த பல்வேறு குழப்பங்கள், நடைமுறை சிக்கல்கள் மற்றும் பொதுமக்கள் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் மிக முக்கியமான நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையாகும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் தெரிவித்துள்ளார்.





இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பல ஆண்டுகளாக பதிவுத்துறையில் குறிப்பாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பாக பொதுமக்கள், வீடு வாங்கும் நடுத்தர குடும்பங்கள், விவசாயிகள், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் பல்வேறு நிர்வாக சிக்கல்கள், தேவையற்ற அலைச்சல்கள், கூடுதல் செலவுகள் மற்றும் மன உளைச்சல்களை அனுபவித்து வந்தனர்.
குறிப்பாக, ஒரு சொத்து அமைந்துள்ள பகுதியின் நான்கு பக்க எல்லைகளில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த வழிகாட்டி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு காரணமாக பொதுமக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ்., அவர்கள் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை மிகத் தெளிவான மற்றும் நடைமுறை சார்ந்த விளக்கங்களுடன் அமைந்துள்ளது.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் ஒரே மாதிரியான உச்சபட்ச வழிகாட்டி மதிப்பை கட்டாயமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், சொத்தின் தன்மை, பயன்பாடு, அணுகுமுறை, சாலை வசதி, இட அமைப்பு, பயன்பாட்டு வகை மற்றும் நிலத்தின் தனித்துவ அம்சங்களை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, குடியிருப்பு பகுதி, வணிக பகுதி, தொழிற்சாலை பகுதி, விவசாய நிலம் மற்றும் மனைப்பிரிவுகள் ஆகியவற்றை ஒரே வகை மதிப்பீட்டில் அணுகாமல், அவற்றின் உண்மையான பயன்பாடு மற்றும் நிலைமை அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என வழங்கப்பட்டுள்ள தெளிவுரை மிகுந்த வரவேற்புக்குரியது.
மேலும், சொத்து அமைந்துள்ள சாலையின் தன்மை, அணுகும் வசதி, பயன்பாட்டு மாற்றம் மற்றும் வணிக முக்கியத்துவம் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை திணிக்கக் கூடாது என பதிவுத்துறை தலைவர் வழங்கியுள்ள அறிவுறுத்தல், பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
முக்கியமாக, விவசாய நிலங்களை குடியிருப்பு அல்லது வணிக நிலங்களுடன் ஒப்பிட்டு தவறான மதிப்பீடுகள் செய்யக் கூடாது என்றும், ஒரு பகுதியில் உள்ள அனைத்து சொத்துகளையும் ஒரே கோணத்தில் அணுகாமல் தனித்தனியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள் பதிவுத்துறையில் புதிய வெளிப்படைத்தன்மைக்கு அடித்தளமாக அமையும்.
நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு பதிவுத்துறையின் செயல்பாடுகள் மக்கள் நல அக்கறையுடன், வெளிப்படையாகவும், நடைமுறை சார்ந்த அணுகுமுறையுடனும் செயல்படத் தொடங்கியுள்ளன என்பதை இந்த சுற்றறிக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இனி பதிவுத்துறையின் சேவைகள் மேலும் ஆக்கபூர்வமாகவும், பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், பதிவுத்துறையில் நிலவி வரும் பிற பிரச்சனைகளுக்கும் இதேபோன்ற தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்கள், ரியல் எஸ்டேட் கூட்டமைப்புகள், அனுபவமிக்க அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து நடைமுறைசார் தீர்வுகள் கொண்டு வரப்பட்டால் பதிவுத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மேலும் உயரும்.
இத்தகைய சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில்:
பொதுமக்களின் அலைச்சல் குறையும்
தேவையற்ற பணச்சுமைகள் நீங்கும்
லஞ்சம் மற்றும் முறைகேடுகள் கட்டுப்படும்
பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்
சொத்து பரிவர்த்தனைகள் எளிமையாகும்
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி பெறும்
அரசின் வருவாய் உயர்வதற்கும் வழிவகுக்கும்
என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, பதிவுத்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிர்வாக சீர்திருத்த சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்
நிறுவனர் மற்றும் தேசிய தலைவர்
டாக்டர் ஹென்றி அவர்கள் தெரிவித்துள்ளார்.

