சென்னை: “மக்களுக்காக முழுமையாகக் களமிறங்கும்போது அரசியல் மட்டுமே என் பிரதானமாக இருக்கும்; நடிப்பையும் அரசியலையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் செய்ய முடியாது” என்று கூறி, சினிமா வாழ்க்கையை முழுமையாகத் துறந்துவிட்டு முதலமைச்சர் விஜய் தீர்க்கமான முடிவை எடுத்ததாக அவரது தாயார் சோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பெற்றோரிடம் விவாதித்த சுவாரஸ்யமான பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நெகிழ்ச்சியில் தந்தை எஸ்.ஏ.சி!
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கடந்த மே 4-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தனது பெற்றோரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நெகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து, “என்ன பா.. உங்க ஆசை நிறைவேறிடுச்சா?” என்று கேட்க, எஸ்.ஏ.சி உணர்ச்சிவசப்பட்டு, “ஆமாப்பா…” என்று பதிலளித்துள்ளார். விஜய்யை ஒரு முதலமைச்சராகப் பார்க்க வேண்டும் என்பது அவரது தந்தையின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது.
2023-லேயே எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவு
கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் விஜய் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சோபா சந்திரசேகர் கூறுகையில்:
“விஜய் அதைச் சொன்னதும் நானும் எஸ்.ஏ.சியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். ‘சினிமா நடிகர் என்பது வேறு, அரசியல்வாதி என்பது முற்றிலும் வேறு; நன்றாக யோசித்துக் கொள்’ என்று நான் கூறினேன். ஆனால் விஜய் மிகவும் உறுதியாக, ‘இல்ல மா.. நான் முடிவு பண்ணிட்டேன்‘ என்று பதிலளித்தார்.”
சினிமாவைத் துறந்த விஜய்
அரசியல் முடிவை எடுத்தபோது, தந்தை எஸ்.ஏ.சி அவரிடம் சினிமா நடிப்பையும் அரசியலையும் ஒன்றாகக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு உடன்படாத விஜய், “ஒரே நேரத்தில் இரண்டையும் செய்ய முடியாது. இல்ல பா.. நான் டிசைட் பண்ணிட்டேன்!” என்று மிக அழுத்தமாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார்.
பெற்றோரைச் சந்திக்க வந்த முதலமைச்சர் விஜய், வீட்டில் பணிபுரியும் அலுவலக மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உட்பட அனைவருடனும் அன்போடு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தாயார் சோபா சந்திரசேகர் தனது மகனுக்கு ஒரு பிரத்யேக காப்பை பரிசாக வழங்கி வாழ்த்தியுள்ளார்.
விஜய்யின் இந்த அரசியல் பயணம் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதும், மக்கள் பணிக்காக மட்டுமே உழைக்க வேண்டும் என்ற தீர்க்கமான நோக்கத்தோடு அவர் சினிமா வாழ்க்கையைத் துறந்து களம் கண்டுள்ளார் என்பதும் இந்தத் தகவல்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

