தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிரடி திருப்பமாக, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே. அண்ணாமலை விலகியுள்ளார். டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவரைச் சந்தித்து தனது 5 பக்க விலகல் கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையின் விருப்பத்திற்கு மாறாக, கட்சித் தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததும், அத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியுமே அவரது இந்த விலகலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
பாஜகவை உதறிய கையோடு, அண்ணாமலை விரைவில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். அடுத்த 6 மாதங்களில் அதனைப் புதிய அரசியல் கட்சியாக மாற்றும் திட்டமும் அவரிடம் உள்ளது. இந்த புதிய அமைப்பு, அண்மையில் காலியான திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் நேரடியாகக் களமிறங்கி தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்க வியூகம் அமைத்துள்ளது.
தமிழக அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கும் இளைஞர்கள் மற்றும் வாக்காளர்களைத் தன்வசம் ஈர்க்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதனால், புதிய பிராந்திய சக்தியாக உருவெடுக்கப் போகும் அண்ணாமலையின் இந்த அதிரடி பிளான், அண்மையில் கட்சி தொடங்கி அரசியல் அலையை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்க்கு மிக நேரடியான சவாலாகவும், குடைச்சலாகவும் மாறும் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

