புதுடெல்லி: அரசுமுறைப் பயணமாக இன்று (27.5.2026) புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்குத் தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை, புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஆர். ஜெயா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து, மலர்க்கொத்து வழங்கி இன்முகத்துடன் வரவேற்றார்.
முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு:
இந்த வரவேற்பு நிகழ்வின் போது தமிழ்நாடு இல்லத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு இல்ல வளாகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் காவல்துறையினர் சார்பில் துப்பாக்கி ஏந்திய கம்பீரமான அணிவகுப்பு மரியாதை (Guard of Honour) அளிக்கப்பட்டது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களைச் சந்திப்பதற்கும், தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசுவதற்கும் டெல்லி வந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த டெல்லி பயணத் திட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

