தமிழக அரசின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையிலும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையிலும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

விளையாட்டுத் துறை குறித்த முக்கிய அறிவிப்புகள்:

  • 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்: ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்-வீராங்கனைகள் தங்கம் வெல்வதை லட்சியமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் (Olympic Centres of Excellence) அமைக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளி மாணவர்களுக்கான தினசரி விளையாட்டு நேரம்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி நேரம் முடிந்த பிறகு தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு ஒதுக்கப்படும். இதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளை அரசே வழங்கும்.
  • இளம் திறமையாளர்களுக்கு உலகத் தரப் பயிற்சி: விளையாட்டில் ஆர்வம் மற்றும் தனித்திறமை கொண்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலகத் தரமான பயிற்சி வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வீரர்களுக்கு நிதியுதவி: தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காகக் கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் வகையில், கிராமிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பல்கலைக்கழக உட்கட்டமைப்பு: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு வசதிகள்: பொதுமக்களும் இளைஞர்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறிய உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version