புதுடெல்லி / சென்னை:
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (மே 27) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமானதொரு சட்டப் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வந்த நிலையில், இத்தீர்ப்பு அவரது சமூக நீதிப் பயணத்திற்குக் கிடைத்துள்ள பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
தள்ளுபடி செய்யப்ப்பட்டதற்கான காரணம்:
இந்த வழக்கின் விசாரணையின் போது, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்:
“69 சதவீத இடஒதுக்கீடு முறையினால் தங்களுக்கு மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லை என்று கூறி, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் போது, மனுதாரர்கள் அனைவரும் தங்களது மருத்துவப் படிப்பை ஏற்கனவே வெற்றிகரமாகப் படித்து முடித்துவிட்டனர். எனவே, தற்போதைய சூழலில் இந்த மனுக்களை மேலும் விசாரிப்பதற்கோ அல்லது தொடர்வதற்கோ மனுதாரர்களுக்கு எந்தவித சட்டபூர்வ முகாந்திரமும் (Locus Standi) இல்லை.”
மனுதாரர்கள் தரப்பிலும் தங்களுக்கு தற்போது இதில் எவ்வித கோரிக்கையும் இல்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்தது.
சமூக நீதி காக்கப்பட்டது:
அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாப்புப் பெற்றுள்ள தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டை உடைக்கப் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், மருத்துவப் படிப்பை மையமாக வைத்துத் தொடரப்பட்ட முக்கிய மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BCM, MBC/DNC, SC, ST) மிகப்பெரிய நிம்மதியையும், சட்டப் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள போதிலும், 69% இடஒதுக்கீட்டின் ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த முதன்மை வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருப்பதால், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து விழிப்புடன் வாதாடத் தயாராக இருப்பதாகத் டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

