புது டெல்லி: தேர்தல்களில் பின்பற்றப்படும் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (Special Intensive Revision – SIR) முறையை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது.
நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்காகவே இந்த SIR முறை பின்பற்றப்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு:
இந்த வழக்கின் விசாரணையின் போது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வு, வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பது மற்றும் தேர்தலைத் துரிதமாக நடத்துவது தொடர்பான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முறையைச் செயல்படுத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் எவ்வித குளறுபடிகளும் இன்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதை உறுதி செய்யவே இந்த நடைமுறை பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது.
மனுதாரர்களின் வாதம் நிராகரிப்பு:
SIR முறைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரால் தொடரப்பட்ட மனுக்களில் கூறப்பட்டிருந்த வாதங்களை முற்றிலும் நிராகரித்த நீதிமன்றம், இந்த நடைமுறையில் எவ்வித சட்டவிரோதமோ அல்லது அரசியல் சாசனத்திற்கு எதிரான விதிமீறல்களோ இல்லை என்று குறிப்பிட்டதோடு, பொது நலனைக் கருத்தில் கொண்டே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம், தேர்தல் ஆணையம் தனது தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளையும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளையும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


