சிவகங்கை: பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அள்ள வைத்த புகாரில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்தது. மேலும், அரசு மாணவர்களுக்காக இலவசமாக வழங்கிய புத்தகங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத ஷூக்களை எரித்து, அந்த அட்டைப் பெட்டிகளையும் மாணவர்களை வைத்தே தலைமை ஆசிரியை அகற்றச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான விவரங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளிக்குக் கல்வி கற்க வரும் மாணவர்களைப் பாதுகாப்பு விதிகளை மீறி, துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தியது குறித்துப் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, மழை காரணமாகப் புத்தகங்கள் நனைந்து வீணானதால் அட்டைப் பெட்டிகளை எரித்ததாகவும், மாணவர்கள் வாங்காத ஷூக்களைத் தூக்கி எறிந்ததாகவும் தலைமை ஆசிரியை மழுப்பலான பதில்களை அளித்துள்ளார்.
இதனையடுத்து, மாணவர் உரிமை மற்றும் குழந்தை பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட குற்றத்திற்காக, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையை உடனடியாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் (Transfer) செய்து மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“பள்ளி வளாகங்களில் மாணவர்களை எவ்விதமான துப்புரவுப் பணிகளிலோ அல்லது இதர வேலைகளிலோ ஈடுபடுத்தக் கூடாது என ஏற்கனவே கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மீறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடரும்,” என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

