மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று இந்தியப் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. நாள் முழுவதும் ஓரளவு நிலையாகக் காணப்பட்ட வர்த்தகம், கடைசி ஒரு மணி நேரத்தில் திடீரென முடங்கி, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் மிக மோசமான சரிவைச் சந்தித்தன. இந்த அதிரடி வீழ்ச்சியால் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை துடைத்தெறியப்பட்டுள்ளது.
இன்றைய இறுதி நிலவரம் (Closing Bell):
- பிஎஸ்இ சென்செக்ஸ் (BSE Sensex): 1,092.06 புள்ளிகள் (1.44%) சரிந்து 74,775.74 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- என்எஸ்இ நிஃப்டி (NSE Nifty 50): 359.40 புள்ளிகள் (1.50%) வீழ்ச்சியடைந்து 23,547.75 என்ற அளவில் நிலைபெற்றது.
- நிஃப்டி பேங்க் (Nifty Bank): 614.65 புள்ளிகள் சரிந்து 54,239.20 புள்ளிகளில் முடிவடைந்தது.
திடீர் சரிவுக்கான 4 முக்கிய காரணங்கள்:
- 1. அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இறுதி ஒப்புதலுக்காக இந்த ஒப்பந்தம் காத்திருப்பதால், உலகளாவிய சந்தைகளில் நிலவும் பதற்றம் இந்தியச் சந்தையையும் பாதித்துள்ளது.
- 2. பருவமழை பொய்க்கும் என்ற அச்சம் (IMD Forecast): இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூன் – செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விடக் குறைந்து (90% LPA) ‘below normal’ என்ற அளவில் இருக்கும் என கணித்துள்ளது. இது உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும் (Inflation), கிராமப்புறத் தேவைகளையும் பாதிக்கும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களிடையே உருவாக்கியுள்ளது.
- 3. MSCI குறியீட்டு மறுசீரமைப்பு (MSCI Rebalancing): மே மாதத்திற்கான MSCI குறியீட்டு மறுசீரமைப்பு நேற்று இறுதி நேரத்தில் அமலுக்கு வந்தது. இதன்காரணமாக, சில முன்னணி பங்குகளிலிருந்து சர்வதேச நிதிகள் தங்கள் முதலீடுகளைத் திடீரெனத் திரும்பப் பெற்றதால் சந்தையில் கடுமையான விற்பனை அழுத்தம் (Selling Pressure) ஏற்பட்டது.
- 4. எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்: மே மாதத்திற்கான மாதாந்திர எஃப் அண்ட் ஓ (F&O Expiry) ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்ததும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வெளியேற்றியதும் இந்த வீழ்ச்சிக்குக் கூடுதல் காரணங்களாக அமைந்தன.
டாப் கெயினர்ஸ் & லூசர்ஸ்:
- சாதகமான பங்குகள் (Gainers): ஒட்டுமொத்த சந்தையும் சரிந்த நிலையிலும், ஐடி (IT) துறை பங்குகள் மட்டும் தப்பின. விப்ரோ (Wipro), டெக் மஹிந்திரா (Tech Mahindra), ஹெச்சிஎல் டெக் (HCL Tech), இன்ஃபோசிஸ் (Infosys) மற்றும் எல் அண்ட் டி (L&T) ஆகிய பங்குகள் லாபத்தில் முடிந்தன.
- சரிந்த பங்குகள் (Losers): பவர் கிரிட் (Power Grid), இண்டிகோ (IndiGo), பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance), டாடா ஸ்டீல் (Tata Steel), ஓஎன்ஜிசி (ONGC) மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய பங்குகள் 2% முதல் 4% வரை பலத்த சரிவைச் சந்தித்தன.

