அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறிய சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, மேலும் ஒரு பேரடியாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அணி வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் கடும் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தங்களது பந்துவீச்சு ஓவர்களை வீசி முடிக்கத் தவறியது (Slow Over Rate).
இரண்டாவது முறை விதிமீறல் – ரூ.24 லட்சம் அபராதம்:
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘ஸ்லோ ஓவர் ரேட்’ விதிமீறலில் சிக்குவது இது இரண்டாவது முறையாகும். ஐபிஎல் ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒரே சீசனில் இரண்டாவது முறையாக இந்த தவறைச் செய்யும் கேப்டனுக்கு அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்படும்.
இதன் காரணமாக, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, அணியில் விளையாடிய மற்ற வீரர்களுக்கும் (Impact Player உட்பட) தலா ரூ. 6 லட்சம் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் (எது குறைவோ அது) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஏமாற்றம்:
முன்னதாக நடைபெற்ற வாழ்வா சாவா போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியைத் தழுவியதன் மூலம், இந்த சீசனின் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பை இழந்து சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக எலிமினேட் (Eliminated) ஆனது. தோல்வியின் விரக்தியில் இருந்த சென்னை அணிக்கு, இந்த மெகா அபராத நடவடிக்கை மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

