ஜெய்ப்பூர்: வடமேற்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள தீவிர வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்குக் கொடூரமான புழுதிப் புயல் (Sandstorm) வீசியுள்ளது. மகாபாரதக் காட்சிகளில் வருவது போல, ஒரு பிரம்மாண்ட மணல் சுவர் ஒட்டுமொத்த நகரங்களையும் அப்படியே மூடி மறைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக பிகானேர், சூரு, ஜோத்பூர் மற்றும் ஸ்ரீ கங்கானகர் ஆகிய மாவட்டங்கள் இந்தச் சூறாவளியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மதியம் 2 மணிக்கே ஒட்டுமொத்த வானமும் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறப் புழுதி மேகங்களால் சூழப்பட்டு, நள்ளிரவு போல இருள் சூழ்ந்தது.
பூஜ்ஜியமாக குறைந்த பார்வைத் திறன்: புழுதிப் புயலின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வரை இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வானிலை மாற்றத்தால், நெடுஞ்சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களின் வாகன முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டவாறே ஆமை வேகத்தில் செல்ல வேண்டியிருந்தது. பல இடங்களில் பார்வைத் திறன் (Visibility) முற்றிலுமாக பூஜ்ஜிய நிலைக்குச் சென்றதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
மக்கள் அதிர்ச்சி: “மதிய நேரத்தில் இப்படி ஒரு காட்சியை நாங்கள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. திடீரென ஒரு பெரிய மணல் மலை எங்களை நோக்கி நகர்ந்து வருவது போல் இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஊரே இருண்டுவிட்டது” எனச் சூரு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் தங்களது அச்சத்தைப் பகிர்ந்துள்ளனர். பலத்த காற்று காரணமாகப் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
வெப்பம் தணிந்தது: இருப்பினும், இந்த அதிரடி புழுதிப் புயலைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த சில வாரங்களாகக் கொளுத்தி வந்த கடுமையான கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, வெப்பம் கணிசமாகக் குளிர்ந்துள்ளது மக்களுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு வடமாநிலங்களில் இத்தகைய வழுவான காற்றுடன் கூடிய தூசுப் புயல் நீடிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

