சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறையின் ‘Online Registration 3.0’ மென்பொருளில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகளால் சட்டப்படி முழுமையாகத் தயாராக உள்ள ஆவணங்கள்கூட முடக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் கடுமையான மனஉளைச்சலையும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு, FAIRA அமைப்பின் நிறுவனரும் தேசியத் தலைவருமான டாக்டர் ஆ. ஹென்றி விரிவான கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

ஊத்துக்கோட்டை நிலப் பதிவில் நேர்ந்த இழுபறி

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கலவை கிராமத்தில் அமைந்துள்ள 43.23 ஏக்கர் வேளாண் நிலத்தைப்பதிவு செய்ய அனைத்து ஆவணங்களும் (வருவாய்த் துறை பதிவுகள், பட்டா, அடங்கல், வில்லங்கச் சான்று, GPS, Google Location) ஒரு வாரத்திற்கு முன்பே ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், அதில் சில புல எண்களில் 10 சென்டிற்கும் குறைவான நிலப்பரப்பு இடம்பெற்றிருந்த காரணத்தைக் காட்டி, ஒட்டுமொத்த ஆவணமும் “Pending Document” நிலைக்கு மாற்றப்பட்டு முடக்கப்பட்டது. இதனால், வாங்குபவர்களும் விற்பவர்களும் நாள் முழுவதும் அலுவலகத்திலேயே காத்திருக்க நேரிட்டதோடு, “கள ஆய்வுக்குப் பிறகே ஆவணம் விடுவிக்கப்படும்” என்று அதிகாரிகள் இழுத்தடித்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

FAIRA தலைவர் டாக்டர் ஆ. ஹென்றியின் அறிக்கை:

“தொழில்நுட்பம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவும், பணிகளை எளிமைப்படுத்துவதற்காகவும் மட்டுமே இருக்க வேண்டும்; மாறாக மக்களைத் தாமதப்படுத்தக் கூடாது. இந்த மனுவின் நோக்கம் எந்தவொரு தனிப்பட்ட அதிகாரியையும் குறை கூறுவது அல்ல. பொதுமக்களின் கண்ணியம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை, அரசின் வருவாய் ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைன் 3.0 மென்பொருளை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.”

பதிவுத்துறைக்கு FAIRA முன்வைக்கும் 4 முக்கிய கோரிக்கைகள்:

  1. உடனடி ஆவண வெளியீடு (Same Day Release): “Same Day Registration – Same Day Document Release” என்ற மக்கள் நட்பு சேவையை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பதிவு அலுவலகங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. தாமத நடைமுறையைத் தவிர்த்தல்: பெரிய நிலப்பரப்புடன் இணைந்து இடம்பெறும் சிறிய புலப்பகுதிகளுக்காக, ஒட்டுமொத்த ஆவணத்தையும் “Pending Document” நிலைக்கு அனுப்பித் தாமதப்படுத்தும் தற்போதைய நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  3. நவீன தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: தேவையற்ற நேரடிப் புல ஆய்வுகளைத் தவிர்த்து, பதிவுத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI), GIS Mapping, செயற்கைக்கோள் படங்கள் (Satellite Imagery), GPS சரிபார்ப்பு மற்றும் வருவாய்த் துறை தரவுத்தளங்களை (Revenue Database) ஒருங்கிணைத்து டிஜிட்டல் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
  4. முதலீட்டாளர் நட்பு சூழல்: தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர் நட்பு சூழல் ஆகிய இலக்குகளுக்குப் பதிவுத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பதிவுத்துறை இந்த மனுவின் அடிப்படையில் உடனடியாகத் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, தேவையற்ற தாமதங்கள் இன்றி ஆவணங்களை அன்றே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version