சென்னை: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விளம்பர அரசியலை மட்டுமே நம்பி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) “சோபா மாடல்” ஆட்சியை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திமுக மற்றும் ஆளும் த.வெ.க. இடையே அரசியல் ரீதியான வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சொகுசு சோபாக்கள் முன்கூட்டியே கொண்டு செல்லப்படுவதை ஒப்பிட்டு, இந்த அரசை “சோபா மாடல் அரசு” என்று உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசை நோக்கி அடுக்கடுக்கான விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
“தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை உருப்படியாக ஒரு மக்கள் நலத்திட்டத்தைக் கூட கொண்டுவர இந்த அரசுக்கு வக்கில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டம்-ஒழுங்கு குறித்துப் பெரிய ‘பஞ்ச் டயலாக்’ பேசியவர்கள், முதலமைச்சரானதும் ‘டீப் ஸ்லிப் மோடுக்கு’ (ஆழ்ந்த உறக்கத்திற்கு) போய்விட்டார்கள். இந்தச் சோபா மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. போலீசாரால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை; ஏன், போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலைதான் இன்று நீடிக்கிறது.”
மேலும், த.வெ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர்:
“பெண்கள் பாதுகாப்புக்காகப் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண்கள் படை’ திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெறும் பெயரையும், யூனிஃபார்மையும் மாற்றுவதுதான் மாற்றமா சிஎம் சார்? எதற்காக இந்த சோபா மாடல் ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று பொதுமக்கள் இன்று வீதிக்கு வந்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். மக்களின் ஏமாற்றமும் கோபமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் திறமையற்ற, வெற்று விளம்பர ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்து, வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை,” என்று அதிரடியாகத் தாக்கினார்.
அண்மையில் நடைபெற்ற சட்டசபை பலப்பரீட்சை மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறிய விவகாரங்களை முன்னிறுத்தி, த.வெ.க. அமைச்சரவையை “13 ஜோக்கர்கள் அடங்கிய நிர்வாகம்” என்றும் உதயநிதி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், உதயநிதியின் இந்த கடுமையான பேச்சு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையேயான அரசியல் மோதலை மேலும் சூடாக்கியுள்ளது.

