பெங்களூரு: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணியில், நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக, நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன், இலங்கைத் தொடரின் போது ஏற்பட்ட இடுப்புப் பகுதி காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் முழுமையாக குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால், தற்போதைய சூழலில் அவர் அணியுடன் இணையவில்லை.
இதனையடுத்து, அவருக்கு மாற்றாக அனுபவமிக்க இடதுகை பேட்ஸ்மேனான ஹென்றி நிக்கோல்ஸ் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
“கேன் வில்லியம்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர் அணியில் இல்லாதது பின்னடைவுதான். ஆனால், அவரது உடல்நலம் எங்களுக்கு முக்கியம். அவர் முழு உடற்தகுதியை எட்ட அவகாசம் தேவைப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ் அணியில் இணைந்துள்ளார். நிக்கோல்ஸ் சர்வதேச போட்டிகளில் நல்ல அனுபவம் கொண்டவர், இந்த சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவரது பங்களிப்பு அணிக்கு பலம் சேர்க்கும்,” என்று கூறினார்.
கேன் வில்லியம்சன் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து மருத்துவக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஹென்றி நிக்கோல்ஸ், இந்திய மண்ணில் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

