புதுடெல்லி:
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் தேசிய தகுதித் தேர்வுக்கான (UGC NET June 2026) ஹால் டிக்கெட்டை (Admit Card) தேசிய தேர்வு முகமை (NTA) இன்று (ஜூன் 17) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்த முழு விவரங்கள் இதோ.
உதவிப் பேராசிரியர் தகுதி, இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி (JRF) மற்றும் பிஎச்.டி (Ph.D) சேர்க்கைக்கான யூஜிசி நெட் ஜூன் பருவத் தேர்வுகள், வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Mode) நடைபெறவுள்ளன. இத்தேர்வுக்கான தேர்வு நகர விவரங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது தேர்வு மையம் மற்றும் நேரத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூன் 22, 23, 24, 25, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள், தங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியைப் (Date of Birth) பயன்படுத்தி இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வர்கள் கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களின் ஹால் டிக்கெட்டைப் பெறலாம்:
1.அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லுதல்:படி 1.
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ யூஜிசி நெட் இணையதளமான ugcnet.nta.nic.in என்ற முகவரிக்குச் செல்லவும்.
2.இணைப்பைக் கிளிக் செய்தல்:படி 2.
முகப்புப் பக்கத்தில் உள்ள “UGC NET June 2026 Admit Card” என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.
3.விவரங்களை உள்ளிடுதல்:படி 3.
புதிதாகத் தோன்றும் பக்கத்தில் உங்களுடைய விண்ணப்ப எண் (Application Number), பிறந்த தேதி (Date of Birth) மற்றும் பாதுகாப்பு குறியீட்டு எண் (Security Pin) ஆகியவற்றைத் துல்லியமாக உள்ளிடவும்.
4.பதிவிறக்கம் செய்தல்:படி 4.
விவரங்களைச் சமர்ப்பித்தவுடன் (Submit), உங்களது ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதைச் சரிபார்த்து, ‘Download’ செய்து பிரிண்ட் அவுட் (Hard Copy) எடுத்துக் கொள்ளவும்.
முக்கியக் குறிப்பு: தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுடன் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை (ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம்) ஆகியவற்றைத் தேர்வு மையத்திற்குத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வு நேரங்கள் மற்றும் விவரம்:
யூஜிசி நெட் தேர்வு நாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகளாக (Shifts) நடைபெறும். முதல் ஷிப்ட் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் நடைபெறும். இந்தத் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் (No Negative Marking) எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால், தேர்வர்கள் என்.டி.ஏ உதவி மைய எண்களையோ (011-40759000) அல்லது மின்னஞ்சல் முகவரியையோ (ugcnet@nta.ac.in) தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

