சென்னை: தமிழ் திரையுலகில் வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல நூறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர் நடிகர் பாவா லட்சுமணன். ‘மாயி’ திரைப்படத்தில் இவர் பேசிய “வாம்மா மின்னல்” என்ற ஒரே ஒரு வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் பயணித்த இவர், கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது காலில் உள்ள 3 விரல்கள் நீக்கப்பட்டன. இதனால் பட வாய்ப்புகள் இன்றி, மருத்துவச் செலவிற்கும், தங்குவதற்கும் இடமில்லாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். வறுமையின் காரணமாக சாலிகிராமத்தில் உள்ள ஒரு திரைப்பட அலுவலகத்தின் திண்ணையிலேயே படுத்துறங்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
அமைச்சர் நேரில் சந்திப்பு: தனது அவல நிலை குறித்து பாவா லட்சுமணன் அண்மையில் பேட்டியில் கண்ணீருடன் உருக்கமாகப் பேசியிருந்தார். இந்தத் தகவல் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட அமைச்சர் ராஜ்மோகன், பாவா லட்சுமணனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எம்.எல்.ஏ விடுதியில் தங்குமிடம்: வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு உடனடியாக உதவும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் உள்ள சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) விடுதியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையைத் தற்காலிகமாகத் தங்குவதற்கு அமைச்சர் ராஜ்மோகன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “உங்களுடைய ரசிகர்களில் நானும் ஒருவன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்; ஒரு 6 மாத காலத்திற்கு இந்த எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருங்கள். அதற்குள் உங்களுக்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்து தருகிறேன். அத்துடன் உங்களது மருத்துவச் சிகிச்சைக்கும் முழுமையாக அரசு துணையாக இருக்கும்” என உறுதியளித்தார்.
தங்குவதற்கு இடமின்றித் தவித்த நலிந்த கலைஞனுக்கு, அமைச்சர் ஓடி வந்து உதவிய இந்த மனிதநேயச் செயல் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

