கலிபோர்னியா: சமூக வலைத்தள ஜாம்பவானான மெட்டா (Meta) நிறுவனம், தனது முன்னணி செயலிகளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பயனர்களுக்குப் புதிய பிரீமியம் அனுபவத்தை வழங்குவதற்காக ‘Instagram Plus’, ‘Facebook Plus’ மற்றும் ‘WhatsApp Plus’ ஆகிய புதிய கட்டணச் சந்தா (Subscription) சேவைகளை உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
விளம்பர வருவாயைத் தாண்டி, பயனர்களுக்கு கூடுதல் தனிப்பயனாக்கப்பட்ட (Customization) வசதிகளை வழங்குவதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு தலைவர் நவோமி க்ளீட் (Naomi Gleit) தெரிவித்துள்ளார்.
என்னென்ன புதிய வசதிகள் கிடைக்கும்?
1. இன்ஸ்டாகிராம் பிளஸ் (Instagram Plus – $3.99/மாதம்):
- உங்களது ஸ்டோரிகளை (Stories) யாரெல்லாம் மீண்டும் மீண்டும் (Rewatch) பார்த்தார்கள் என்ற விவரத்தை அறியலாம்.
- மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக ஸ்டோரிகளை முன்கூட்டியே பார்க்க முடியும் (Anonymous Preview).
- உங்களது ஸ்டோரிகளை வழக்கமான 24 மணி நேரத்தைத் தாண்டியும் நீட்டிக்கச் செய்யலாம்.
- அனிமேஷன் செய்யப்பட்ட ‘சூப்பர் ஹார்ட்’ ரியாக்ஷன்கள், சுயவிவரப் பக்கத்திற்கான (Bio) பிரத்யேக எழுத்துருக்கள் (Fonts) மற்றும் செயலிக் குறியீட்டை (App Icon) மாற்றும் வசதி.
2. பேஸ்புக் பிளஸ் (Facebook Plus – $3.99/மாதம்):
- இன்ஸ்டாகிராமைப் போலவே மேம்பட்ட அனலிட்டிக்ஸ், சுயவிவரப் பக்க உள்கட்டமைப்பு மாற்றம் மற்றும் 48 மணி நேரம் வரை நீடிக்கும் ஸ்டோரி பதிவுகள்.
3. வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus – $2.99/மாதம்):
- பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாட்ஸ்அப் செயலியின் தீம்களை (App Themes) மாற்றும் வசதி.
- பிரீமியம் ஸ்டிக்கர்கள் மற்றும் கஸ்டம் ரிங்டோன்கள்.
- முக்கியமான அரட்டைகளை (Chats) கூடுதலாக பின் (Pin) செய்து வைக்கும் வசதி.
மெட்டா ஒன் (Meta One) திட்டம்: இந்த புதிய ‘பிளஸ்’ அம்சங்கள் அனைத்தும் தற்போதைய ‘மெட்டா வெரிஃபைட்’ (Meta Verified – புளூ டிக்) சேவையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்றும், எதிர்காலத்தில் இந்த அனைத்துச் சேவைகளையும் ‘Meta One’ என்ற ஒரே பிராண்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த சேவைகள் உலகளவில் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன.

