கொச்சி: ‘பிரேமலு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் மமிதா பைஜு, தனது எதிர்கால லட்சியங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரசியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், திரைப்படத் தேர்வு மற்றும் தனது வாழ்க்கை முறை குறித்து மனம் திறந்து பேசினார்.
அந்நிகழ்ச்சியில் மமிதா பைஜு பேசுகையில், “திரைத்துறையில் நான் இருக்கும் வரை என்னுடைய ரசிகர்களின் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடிக்கும், காலங்கள் கடந்தும் நினைவில் நிற்கும் சிறந்த திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் லட்சியம். பணத்தையோ, புகழையோ தாண்டி நல்ல கதபாத்திரங்கள் மூலமே மக்கள் மனதில் வாழ விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், “அதே நேரத்தில், எதிர்காலத்தில் எனக்கென்று ஒரு அன்பான, அழகான குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதும் என் ஆசை. பிற்காலத்தில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, அங்கு உண்மையான மகிழ்ச்சியும், மன அமைதியும், முழுமையான திருப்தியும் நிறைந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் பல முக்கியத் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் மமிதா பைஜுவின் இந்த முதிர்ச்சியான பேச்சு, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

