மும்பை: மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு பெரும் பரபரப்பாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை எம்பிக்கள் (Lok Sabha MPs), அம்மாநில துணை முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் அவரது கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஒய்.பி. சவான் மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இணைப்பு விழாவில், எம்பிக்கள் 6 பேருக்கும் ஏக்நாத் ஷிண்டே கட்சியின் சின்னங்கள் மற்றும் துண்டுகளை அணிவித்து வரவேற்றார். இந்த அரசியல் நகர்வை சிவசேனா தரப்பு ‘ஆபரேஷன் டைகர்’ (Operation Tiger) என்று வர்ணித்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த அந்த 6 எம்பிக்கள்:
- சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ் (பர்பானி தொகுதி)
- பாசாஹேப் ராஜாராம் வக்காவுரே (ஷீரடி தொகுதி)
- ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கர் (தாராஷிவ் தொகுதி)
- சஞ்சய் தினா பாட்டீல் (மும்பை வடகிழக்கு தொகுதி)
- சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக் (யவத்மால்-வாஷிம் தொகுதி)
- நாகேஷ் பாபுராவ் பாட்டீல் அஷ்டிகர் (ஹிங்கோலி தொகுதி)
இனி எங்களிடம் 6 புலிகள் – ஏக்நாத் ஷிண்டே பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “நான் எந்த ஒரு காரியத்தையும் அரைகுறையாகச் செய்ய மாட்டேன். எனது திட்டங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக இருக்கும். தற்போது ‘ஆபரேஷன் டைகர்’ முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. இப்போது எங்களிடம் ஒரு புலி அல்ல, 6 திறமையான புலிகள் (Dhurandhars) எங்களுடன் இணைந்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 22-ல் பாலாசாஹேப் தாக்கரேவின் கொள்கைகளைக் காப்பாற்ற 40 எம்.எல்.ஏ-க்களுடன் நாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்தின் இரண்டாம் கட்டம் இது. தற்போது 6 எம்பிக்கள் இணைந்து எங்களுக்குப் புதிய பலத்தைத் தந்துள்ளனர். நாங்கள் சிக்சர் அடித்துள்ளோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், இந்த எம்பிக்கள் அனைவரும் தங்களது சொந்த ஆதாயத்திற்காக வரவில்லை என்றும், தங்களது தொகுதியின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காகவே உண்மையான சிவசேனாவில் இணைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்த இணைப்பு சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளின்படியே நிருபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஆதித்யா தாக்கரே கடும் விமர்சனம்: மக்களவையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு மொத்தம் 9 எம்பிக்கள் இருந்த நிலையில், தற்போது 6 பேர் ஷிண்டே தரப்பிற்குத் தாவியுள்ளனர். இது உத்தவ் தாக்கரே தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கட்சித் தாவல் குறித்து உத்தவ் தாக்கரேவின் மகனும், கட்சியின் முக்கிய தலைவருமான ஆதித்யா தாக்கரே கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். வாக்களித்த மக்களுக்கு இந்த எம்பிக்கள் துரோகம் இழைத்துவிட்டதாகவும், மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணியின் பலத்தால் வெற்றி பெற்றுவிட்டு இப்போது சுயநலத்திற்காக ஆளுங்கட்சியுடன் கைகோர்த்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

