சென்னை: திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) காலமானதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் தாயார் வயது மூப்பு காரணமாகச் சென்னை இல்லத்தில் இயற்கை எய்திய செய்தி வெளியானது முதல், பல்வேறு தரப்பு அரசியல் தலைவர்களும் அஜித்தின் குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதல்களைக் கூறி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் செய்தி: மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “பிரபல திரைப்பட நடிகர் தம்பி அஜித்குமார் அவர்களின் அன்புத் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்ற தாயை இழப்பது என்பது ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அந்தத் துயரத்தில் இருந்து மீளக்கூடிய மனவலிமையை நடிகர் அஜித்குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இறைவன் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவனடி நிழலில் சாந்தியடைய என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புத் தாயாரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமாருக்கு, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பலரும் தங்களது அனுதாபங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

