சென்னை:
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கத்தின் போது, தவெக அரசின் முக்கிய அமைச்சராகக் கருதப்படும் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் இலாகாவில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாகப் புதிய அரசின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த கே.ஏ. செங்கோட்டையன், தற்போது ‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை’ அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
நிதித் துறை கைமாறியது:
தவெக அரசு முதன்முதலில் கடந்த மே 10 அன்று பொறுப்பேற்ற போது, புதிய அமைச்சரவையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையனுக்குப் பொறுப்புமிக்க நிதித் துறை (Finance Department) ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடந்துள்ள புதிய அமைச்சரவை விரிவாக்கத்தின் காரணமாக, நிதித் துறை இலாகா அவரிடம் இருந்து மாற்றப்பட்டு, புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ள என். மேரி வில்சன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையனுக்கு வருவாய் துறை:
அரசியலிலும் நிர்வாகத்திலும் 50 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அனுபவம் கொண்ட கே.ஏ. செங்கோட்டையன், கடந்த காலங்களில் பல்வேறு முக்கியத் துறைகளைத் திறம்படக் கையாண்டவர் என்பதால், மாநிலத்தின் மற்றொரு முக்கியத் துறையான ‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை’ தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளை முடுக்கிவிடுவதில் இவருடைய நிர்வாக அனுபவம் பெரிதும் உதவும் என்ற நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முழு வீச்சில் தவெக கேபினெட்:
புதிதாக 23 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டு, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ள நிலையில், தவெக அரசு தனது நிர்வாகப் பணிகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் புதிய இலாகா ஒதுக்கீடுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

