இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான தொடர், வரும் மார்ச் 28 அன்று பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர். மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை (First Phase Schedule) இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, இரண்டாம் கட்ட மற்றும் முழுமையான அட்டவணை வெளியிடப்படும் என பிசிசிஐ (BCCI) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடைபெறும் தேதிகளில் பாதுகாப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாநிலங்களில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட அட்டவணையில் சுமார் 15 முதல் 20 போட்டிகள் வரை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதிகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் சில போட்டிகள் மாற்றுக் களங்களுக்கு (Neutral Venues) மாற்றப்படவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதால் ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. ‘மஞ்சள் படை’ மற்றும் ‘ஆர்சிபி’ ரசிகர்களுக்கு இந்தத் தேர்தல் தேதிகள் எந்த அளவிற்குப் போட்டிகளைப் பாதிக்கும் என்பதே இப்போதைய பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.


