புவனேஸ்வர்: இந்திய பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை எட்டும் நோக்கில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீண்டதூர க்ரூஸ் ஏவுகணை (Indigenous Long Range Cruise Missile) ஒடிசா கடற்கரையில் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை, அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டோமாஹாக்’ ஏவுகணைகளுக்கு இணையான தொழில்நுட்பத் தரத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ITR) இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி மிகத் துல்லியமாகப் பயணித்த இந்த ஏவுகணை, தனது அனைத்து சோதனைப் புள்ளிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- ராடார் கண்காணிப்பு: ஏவுகணையின் முழுப் பயணத்தையும் நிலப்பரப்பில் உள்ள பல்வேறு ராடார்கள், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் அமைப்புகள் மற்றும் டெலிமெட்ரி நிலையங்கள் மூலம் விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
- தாழ்வாகப் பறக்கும் திறன்: எதிரி நாட்டு ராடார்களின் கண்களில் மண்ணைத் தூவி, தரைமட்டத்திற்கு மிக நெருக்கமாக (Sea-skimming/Low altitude) பறந்து சென்று தாக்கும் தனித்துவமான தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளது.
- உள்நாட்டு எஞ்சின்: இந்த ஏவுகணையில் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘மணிக்ப்’ (Manik) டர்போஃபேன் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
ராணுவ பலம் அதிகரிப்பு: இந்தச் சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் DRDO விஞ்ஞானிகள் குழுவிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இத்தகைய நீண்டதூர ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் போது, நாட்டின் எல்லையோரப் பாதுகாப்பு மற்றும் கடற்படைத் திறன் பல மடங்கு அதிகரிக்கும் எனப் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

