ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்காக ஹராரே மைதானத்தில் களம் இறங்கும் இந்திய அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஜிம்பாப்வேயின் புகழ்பெற்ற ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (Harare Sports Club) மைதானத்தில் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஹராரே மைதானத்தில் வைபவ் செய்த சாதனை

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதே ஹராரே மைதானத்தில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்து அணிக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து உலகளவில் இந்தியாவிற்கு ஆறாவது முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்தார். மேலும், அரைஇறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 33 பந்துகளில் 68 ரன்களும் விளாசியிருந்தார்.

‘ராசியான மைதானம்’ – மாஸ் காட்டுவாரா வைபவ்?

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் வைபவ் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் சேர்க்காத நிலையில், தனக்கு மிகவும் ராசியான ஹராரே மைதானத்திற்கு மீண்டும் திரும்பியிருப்பது அவருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

இது குறித்துப் பேசிய வைபவ் சூர்யவன்ஷி:

“ஹராரே எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு மைதானம். 4 மாதங்களுக்கு முன்பு இங்கு தான் U-19 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தோம். மீண்டும் அதே மைதானத்தில் இந்திய அணிக்காக களமிறங்குவது மிகவும் சிறப்பானது. இங்குள்ள பிட்ச் தன்மைகளை நன்கு அறிவேன். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளிப்பேன்” என்றார்.

இளம் வயது நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, மீண்டும் அதே மைதானத்தில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே பந்துவீச்சை நாசம் செய்வார் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version