சென்னை: தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீட்டுமனை கனவைப் பாதுகாக்கும் நோக்கில், நகர்ப்புற உள்கட்டமைப்பு விதிகளை கிராம ஊராட்சிகளுக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து FAIRA நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் A. ஹென்றி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு விரிவான கொள்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
- நகர்ப்புற விதிகளைத் திணிக்கக் கூடாது: நகர்ப்புறங்களுக்காக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு விதிகளையும், அரசாணை 181/2020-ஐயும் கிராமங்களுக்கும் கட்டாயப்படுத்துவது ஏழை மக்களின் மனை கனவைச் சிதைக்கும் செயலாகும்.
- அத்தியாவசியக் தேவைகள் மட்டுமே போதும்: தொலைதூர மற்றும் விவசாய கிராமங்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் மட்டுமே போதுமானது. மக்கள் குடியேறிய பிறகே தேவைக்கேற்ப உள்கட்டமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.
- பொருளாதார சுமை: வீடுகள் கட்டுவதற்கு முன்பே தேவையற்ற உள்கட்டமைப்புச் செலவுகளையும், அதிகப்படியான கட்டணங்களையும் திணிப்பதால் மனை விலை பல மடங்கு உயர்ந்து, எளிய மக்களுக்குச் சட்டபூர்வமான மனைகள் எட்டாக்கனியாக மாறுகின்றன.
FAIRA-வின் முக்கிய கோரிக்கைகள்:
- நகர்ப்புற உள்கட்டமைப்பு விதிகளை கிராமங்களில் கட்டாயமாக்கும் நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- நகரத்தை ஒட்டியுள்ள கிராமங்கள் (Peri-Urban) மற்றும் தொலைதூரக் கிராமங்களைப் பிரித்து, பகுதிக்கு ஏற்றவாறு விதிகளைத் தளர்த்த வேண்டும்.
- மக்கள் குடியேற்றத்திற்கு ஏற்பப் படியபடியாக உள்கட்டமைப்புகளைக் கொண்டுவரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
- ஒப்புதல் கோப்புகளைத் தேவையின்றி நிலுவையில் வைக்காமல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு செய்ய வேண்டும்.
- கிராமப்புற மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு, எளிய விதிகளுடன் கூடிய புதிய மக்கள் நல சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
“வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்காலத்தில் ஒரு சொந்த மனை இருக்க வேண்டும். அந்தக் கனவைப் பாதுகாப்பது அரசின் சமூக நீதிக்கான கடமையாகும்” என்று டாக்டர் A. ஹென்றி தெரிவித்துள்ளார்.


