சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் மனைப்பிரிவு திட்டங்களில் மேல்நிலை குடிநீர்த்தொட்டி (Overhead Water Tank) அமைப்பதற்கான நில ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான TNRERA-வில் எழுத்துப்பூர்வமான விதிகளின்றி வாய்மொழி நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும், இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் பதிவு நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.

இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகாணக் கோரி FAIRA சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இன்று (28.09.2026) விரிவான கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

சிக்கலும் சர்ச்சையும் – என்ன நடக்கிறது?

  • வாய்மொழி நிபந்தனை: மனைப்பிரிவில் திறந்தவெளி / பூங்கா பகுதியில் மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைக்கப்பட்டிருந்தால், அதற்கு இணையான பரப்பளவு கொண்ட விற்பனைக்குரிய நிலத்தைச் தனியாக ஒதுக்கி உள்ளாட்சிக்கு தானமாக வழங்கினால் மட்டுமே திட்டப் பதிவு செய்ய முடியும் என TNRERA அதிகாரிகளால் வாய்மொழியாகக் கூறப்படுவதாக FAIRA தெரிவிக்கிறது.
  • சட்டப்பூர்வ ஆதாரம் என்ன?: இந்த நிபந்தனைக்கான அரசாணை, சட்டம் அல்லது விதிமுறை என்ன என்பதைச் சுட்டிக்காட்டக் கோரி கடந்த 21.09.2026 அன்றே FAIRA சார்பில் TNRERA தலைவருக்குக் கடிதம் எழுதப்பட்டும், இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.

FAIRA நிறுவனர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்களின் ஆவேசக் குரல்:

“விதிமுறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்; அதனை முழுமையாகப் பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் சட்டம், விதிமுறைகளில் இல்லாத ஒரு புதிய நிபந்தனையை வாய்மொழியாகக் கூறி, ரியல் எஸ்டேட் திட்டங்களின் கோப்புகளை நீண்டகாலம் நிலுவையில் வைப்பது முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகிறது.”

காலதாமதத்தின் கடுமையான தாக்கங்கள்:

  1. வட்டி சுமை அதிகரிப்பு: வங்கிக் கடன் பெற்று செயல்படும் மனை மேம்பாட்டாளர்களுக்குத் திட்டப் பதிவு தாமதமாகும் ஒவ்வொரு நாளும் வட்டி சுமை அதிகரிக்கிறது.
  2. முதலீடு முடக்கம்: திட்டச் செலவுகள் அதிகரித்து, மனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சொத்துகளைப் பதிவு செய்து தருவதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.
  3. பொதுமக்களுக்குப் பாதிப்பு: இறுதியில் இந்த நிர்வாகத் தாமதத்தின் சுமை மனை வாங்கும் சாமானிய பொதுமக்களையே சென்றடைகிறது.

முதலமைச்சருக்கு FAIRA முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:

  • சட்டப்பிரிவு விளக்கம்: மேல்நிலை குடிநீர்த்தொட்டி நில ஒதுக்கீட்டிற்குச் சட்டப்பூர்வ விதிமுறை இருந்தால் அதன் அரசாணையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
  • கோப்புகளை முடக்கக் கூடாது: சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாத வாய்மொழி நிபந்தனைகளின் அடிப்படையில் திட்டப் பதிவுகளை நிறுத்தி வைக்கக் கூடாது.
  • ஒரே மாதிரியான வழிகாட்டுதல்: தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான வெளிப்படையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
  • காலவரையறைக்குள் பதிவு: TNRERA-வில் நிலுவையில் உள்ள தடையற்ற கோப்புகளை விரைந்து ஆய்வு செய்து, காலவரையறைக்குள் பதிவு உத்தரவு வழங்க வேண்டும்.

“ஒரே சட்டம் – ஒரே நடைமுறை – காலவரையறைக்குள் தீர்வு” என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு உடனடியாகச் தலையிட்டு, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியையும் பொதுமக்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என FAIRA வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version