சென்னை: நடிகை சமந்தா நடிப்பில் நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான ‘எங்கள் தங்கம்’ (Maa Inti Bangaaram) திரைப்படம், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம், முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 10.70 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘குஷி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து, இதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களைக் கவர்ந்த எமோஷனல் ஆக்சன் த்ரில்லர்
ஒரு பாரம்பரிய குடும்பப் பின்னணியில், தனது கடந்த கால ரகசியங்களை மறைத்து வாழப் போராடும் ஒரு பெண்ணின் கதையாக ‘எங்கள் தங்கம்’ உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், காதல், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வணிக ரீதியிலான அம்சங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமந்தாவின் எமோஷனல் மற்றும் ஆக்ஷன் நடிப்புக்கு தியேட்டர்களில் பலத்த கைதட்டல் கிடைத்து வருகிறது.
பெண்களைக் கவரும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ ஓப்பனிங்!
சமந்தாவின் அபாரமான நடிப்பு மற்றும் படத்தின் விறுவிறுப்பான அனுகுமுறை காரணமாக, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே இரட்டை இலக்க கோடியைத் (Double digit crores) தொட்டு சாதனை படைத்துள்ள ‘எங்கள் தங்கம்’, சமந்தாவின் சினிமா வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக மாறும் என திரைத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

