வாஷிங்டன்: மனிதகுலம் நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் செல்லத் தயாராகி வரும் வேளையில், பூமிக்கு மேலே விண்வெளியில் சூழ்ந்திருக்கும் ‘விண்வெளிக் கழிவுகள்’ (Space Debris / Space Junk) எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த ஆபத்தில் இருந்து விண்கலன்களைக் காக்க ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) அதிபர் எலான் மஸ்க் ஒரு புதிய விநோத திட்டத்தை முன்வைத்துள்ளார்.
விண்வெளிக் கழிவுகள்: அதிரவைக்கும் தற்போதைய தரவுகள்!
விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளின் உடைந்த பாகங்கள், மற்றும் பெயிண்ட் செதில்கள் எனப் பல கோடி கழிவுகள் பூமியைச் சுற்றி அதிவேகமாக வலம் வருகின்றன.
- எண்ணிக்கை: விண்வெளி அமைப்புகளின் தரவுகளின்படி, 10 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவுள்ள 37,000-க்கும் மேற்பட்ட பெரிய கழிவுகளும், 1 சென்டிமீட்டர் அளவுள்ள சுமார் 9,000,000 (9 லட்சம்) நடுத்தரக் கழிவுகளும் விண்வெளியில் சுற்றுகின்றன.
- துகள் வடிவில் கோடிக்கணக்கில்: 1 மில்லிமீட்டர் அளவிலான சிறிய துகள்கள் 128 மில்லியனுக்கும் (12.8 கோடி) அதிகமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- துப்பாக்கி குண்டை விட வேகம்: இந்தக் கழிவுகள் அனைத்தும் மணிக்குச் சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த வேகத்தில் ஒரு சிறிய பெயிண்ட் துளி விண்கலன் மீது மோதினால் கூட, அது ஒரு துப்பாக்கி குண்டு ஏற்படுத்தும் சேதத்தை விடப் பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கெஸ்லர் சிண்ட்ரோம் (Kessler Syndrome) ஆபத்து: விண்வெளிக் கழிவுகள் ஒன்றோடு ஒன்று மோதி, மேலும் பல கோடிக்கணக்கான சிறிய கழிவுகளை உருவாக்கும். இந்தச் சங்கிலித் தொடர் விபத்துகள் அதிகரித்தால், எதிர்காலத்தில் மனிதர்களால் எந்தவொரு செயற்கைக்கோளையும் விண்ணுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படும்.
எலான் மஸ்கின் விநோத பிளான் – ‘ஸ்பேஸ் சாம்ப்பர்’ (Space Chomper)
விண்வெளியில் தங்களின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலன்களைப் பாதுகாக்க, எலான் மஸ்க் தனது பிரம்மாண்ட ஸ்டார்ஷிப் (Starship) விண்கலத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம், விண்வெளியில் சுற்றித் திரியும் பெரிய அளவிலான பழுதடைந்த செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் பாகங்களை, ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன்பகுதியில் உள்ள நகரும் கதவுகளை (Moving Fairing Doors) திறந்து, “விண்வெளிக் கழிவுகளை அப்படியே கபளீகரம் செய்து (Chomp up)” அதன் உள்ளே சேகரித்து, பூமிக்குக் கொண்டு வந்து பாதுகாப்பாக அழிக்க முடியும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளியில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களைக் கொண்ட ‘ஆர்பிட்டல் டேட்டா சென்டர்களை’ (Orbital Data Centers) அமைக்கத் திட்டமிட்டு வருவது விண்வெளிக் கழிவுகளை மேலும் அதிகரிக்கும் என வானியலாளர்கள் எச்சரித்து வரும் வேளையில், மஸ்கின் இந்தத் தூய்மைப்படுத்தும் திட்டம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


