புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மூன்று தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதன் மூலம், எதிரிநாடுகளின் நீண்ட தூர ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கும் ‘பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு’ (Multi-layered Ballistic Missile Defence – BMD) திறன் இந்தியாவிற்கு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது, இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை, DRDO-வின் இன்டர்செப்டர் (Interceptor) ஏவுகணைகள் துல்லியமாக அடையாளம் கண்டு, நடுவானிலேயே தாக்கி அழித்தன. அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.
வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) கூட தடுத்து அழிக்கும் திறன் கொண்ட உலகின் ஒரு சில முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது இணைந்துள்ளது.
அடுத்த தலைமுறைக்கான இந்த பாதுகாப்பு தொழில்நுட்ப சோதனையின் ஒரு பகுதியாக, கடற்படைக்கான நடுத்தர தூர இலக்குகளைத் தாக்கும் ‘ஆண்டி-ஷிப் ஏவுகணை’ (NASM-MR) சோதனையும் முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து
இந்த அசாத்திய சாதனைக்காக DRDO விஞ்ஞானிகள், ஆயுதப் படைகள் மற்றும் இதன் தயாரிப்பில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“எதிரிகளின் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில் இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் சோதிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய ஏவுகணை பாதுகாப்பு வளையம், இந்தியாவின் முக்கிய ராணுவ தளங்கள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளை எதிரிகளின் வான்வழித் தாக்குதல்களில் இருந்து முழுமையாகப் பாதுகாக்கும் அரணாக விளங்கும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

