வாஷிங்டன் / பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தின் போது, வழக்கத்திற்கு மாறான வினோதமான மற்றும் கடுமையான டிஜிட்டல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சீன உளவு அமைப்புகளின் அதிநவீன ஹேக்கிங் (Hacking) மற்றும் சைபர் தாக்குதல்களில் இருந்து அதிபரின் தரவுகளைப் பாதுகாக்க அமெரிக்கப் பாதுகாப்பு முகமைகள் இந்த ‘டிஜிட்டல் லாக்டவுன்’ நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்த வினோத கட்டுப்பாடுகளின் பின்னணி இதோ:
செல்போன், லேப்டாப்களுக்கு முழுத் தடை:
அதிபர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற உயர்மட்ட அதிகாரிகள், அமெரிக்காவில் இருந்து கொண்டு சென்ற தங்களின் சொந்த செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்களைச் சீன மண்ணில் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்கப்பட்டது. சீனாவுக்குள் நுழையும் போதே அவை அனைத்தும் அணைக்கப்பட்டு (Switch Off) பிரத்யேகப் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டன. அதற்குப் பதிலாக, முற்றிலும் புதிய, தற்காலிக ‘டிஸ்போசபிள்’ (Disposable Phones) போன்களே அவர்களுக்கு வழங்கப்பட்டன.
சார்ஜ் கேபிளில் கூட ஆபத்தா?
இந்த லாக்டவுனில் மிக வினோதமான கட்டுப்பாடு என்னவென்றால், சீனாவில் உள்ள எந்தவொரு ஹோட்டல், வாகனங்கள் அல்லது பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் போர்ட்கள் (USB Ports) மற்றும் சார்ஜ் கேபிள்களைப் பயன்படுத்த அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தடை விதித்தனர்.
சைபர் பாதுகாப்பில் இதற்கு “ஜூஸ் ஜாக்கிங்” (Juice Jacking) என்று பெயர். நாம் பயன்படுத்தும் சார்ஜ் கேபிள்கள் மூலமாகவே செல்போன்களில் உளவு மென்பொருள்களை (Malware) ஏற்றி, ஒட்டுமொத்த தரவுகளையும் திருட முடியும் என்பதால், அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் தங்களின் சொந்த பவர் பேங்க்குகள் (Power Banks) மற்றும் பாதுகாக்கப்பட்ட பவர் அடாப்டர்களை மட்டுமே பயன்படுத்தினர்.
ஒட்டுக் கேட்கும் கருவிகள் (Bugs) பயம்:
அதிபர் தங்கியிருந்த அறைகளில் சீன அரசு ரகசிய ஒட்டுக் கேட்கும் கருவிகள் மற்றும் மறைமுக கேமராக்களைப் பொருத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், டிரம்ப் தங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே அதிநவீன ஸ்கேனர்கள் மூலம் அந்த இடங்கள் முழுமையாகச் சோதிக்கப்பட்டன. மேலும், ரகசிய ஆலோசனைகளின் போது அறையைச் சுற்றி செயற்கையான டிஜிட்டல் இரைச்சலை (White Noise) உருவாக்கி, சிக்னல்களைத் துண்டிக்கும் ஜாமர்களும் பயன்படுத்தப்பட்டன.
உலகிலேயே மிகச்சிறந்த சைபர் உளவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள சீனாவிற்குச் செல்லும் போது, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு எந்தளவுக்குக் காப்பற்றப்படுகிறது என்பதை இந்த ‘டிஜிட்டல் லாக்டவுன்’ உலகிற்கு உணர்த்தியுள்ளது.

