புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் பிரபல பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவ்ஜ்லா இருவரும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையைப் பகிர்ந்து கொண்ட வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
டெல்லி துவாரகாவில் உள்ள யஷோபூமி கன்வென்ஷன் மையத்தில் விராட் கோலியின் ‘One8’ பிராண்ட் சார்பில் பிரம்மாண்டமான உலகளாவிய அறிமுக விழா (One8 Global Premiere) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாடகர் கரண் அவ்ஜ்லா, மேடையில் தனது புகழ்பெற்ற ஹிட் பாடலான ‘வினிங் ஸ்பீச்’ (Winning Speech)-ஐப் பாடினார்.
அப்போது மேடைக்கு வந்த விராட் கோலி, கரண் அவ்ஜ்லாவுடன் இணைந்து பாடலின் துள்ளலான இசைக்கு ஏற்ப நடனமாடினார். இருவருக்குள் இருந்த அலாதியான நட்பு மற்றும் மேடை ‘புரோமன்ஸ்’ (Bromance) ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கரண் அவ்ஜ்லா குறித்து விராட் கோலி பேசியதாவது:
“நான் நீண்ட நாட்களாக கரண் அவ்ஜ்லாவின் மிகப்பெரிய ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பாடல்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக அவருடைய ‘வினிங் ஸ்பீச்’ பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. நானும் சிறு வயதிலேயே எனது தந்தையை இழந்தவன் என்பதால், அந்தப் பாடலில் வரும் வரிகள் எனது சொந்த வாழ்க்கை பயணத்தோடு ஒத்துப்போவதை உணர்கிறேன். அதனால்தான், நான் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு முன்பாக இந்தப் பாடலை அடிக்கடி கேட்பது வழக்கம்.”
இதற்கிடையே, நிகழ்ச்சிக்கு முன்பாக மேடைக்கு பின்புறம் (Backstage) இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து நட்பு பாராட்டிய காட்சிகளும், கருப்பு நிற உடையில் இருவரும் தீவிரமாக உரையாடிக்கொண்டிருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளைக் குவித்து வருகின்றன.
விளையாட்டுத் துறையின் ‘கிங்’ விராட் கோலியும், இசைத்துறையின் முன்னணி நட்சத்திரமான கரண் அவ்ஜ்லாவும் ஒரே மேடையில் இணைந்த இந்த நிகழ்வு, “இந்த ஆண்டின் மிகப்பெரிய கொலாபரேஷன்” என ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

