கோயம்புத்தூர்: கோவையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.
பின்னணி என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன் (19) என்ற மாணவர், கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மீது ஏற்கனவே சில ஒழுங்குப் பிரச்சனைகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கல்லூரி விடுதி சமையலர் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் அமுதன் விடுதியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் கல்லூரிக்கு அருகில் உள்ள பூங்கா நகரில் நண்பர்களுடன் வெளியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் இளவரசன் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு செல்போன்களைப் பறித்துச் சென்றுள்ளது. இதில் அமுதனும் ஒருவராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டு, அப்பிரிவினர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அதே நாள் காலை அமுதனுக்கும் எதிர்தரப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கல்லூரி வளாகத்திற்கு பின்னால் உள்ள மைதானத்திற்கு அமுதனை அழைத்துச் சென்ற அந்த கும்பல், உருட்டுக்கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. கடுமையான காயங்களுடன் அறைக்குத் திரும்பிய அமுதனுக்கு மாலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெற்றோரின் பகீர் குற்றச்சாட்டு
இந்த படுகொலைக்கு பழிக்குப்பழி மற்றும் செல்போன் பறிப்பு மோதல் மட்டுமே காரணமல்ல என்று அமுதனின் தந்தை கென்னடி குற்றஞ்சாட்டியுள்ளார். கல்லூரி வளாகத்திற்குள் மற்றும் விடுதியில் நடக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தனது மகன் கல்லூரி நிர்வாகத்திடம் ரகசியமாகத் தகவல் தெரிவித்திருந்ததாகவும், அந்த விவகாரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் தனது மகனைத் திட்டமிட்டுத் தீர்த்துட்டியுள்ளதாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே தன் மகனின் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
சட்டப்பேரவையில் எதிரொலி
மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தின் கோர முகத்தைக் காட்டியுள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 5 மாணவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்த விவகாரங்கள் தமிழக சட்டப்பேரவையிலும் தீவிர விவாதப் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

