சென்னை:
உலக சதுரங்க நாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருவதாகக் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராண்ட் மாஸ்டர்களின் சாதனைகள்:
1988-இல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி எனப் பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு முழு ஆதரவு அளிக்கும்:
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராகத் தமிழ்நாடு முன்னேறி வரும் சூழலில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்து சர்வதேசப் போட்டிகளில் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய முயற்சிகளுக்குத் தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் துணை நின்று தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

