நாளை முதல் அமைச்சரவை கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் சிலவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி, அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரை எப்போது கூட்டுவது, முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் தேதி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அரசின் கொள்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.
அதேபோல், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவை விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில், டாஸ்மாக் கடைகள் தொடர்பான கொள்கை முடிவுகள், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்களின் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அம்சங்களிலும் அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய அரசின் கொள்கை திசையையும், நிர்வாக முன்னுரிமைகளையும் வெளிப்படுத்தும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

