சென்னை:
சின்னத்திரை படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சங்க உறுப்பினர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாகச் சங்கத்தின் தலைவர் நடிகர் பரத் அதிகாரப்பூர்வ வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த 4 முக்கிய தீர்மானங்களின் விவரங்கள் இதோ:
1.சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை:28 நாட்கள் அவகாசம்.
சின்னத்திரை தொடர்களில் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத பலர் நடித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுத்துக் கண்காணிக்க ‘ஸ்குவாட்’ (Squad) குழுக்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தளங்களில் சோதனைகள் நடத்தப்படும். உறுப்பினராக இல்லாதவர்கள் கண்டறியப்பட்டால், கார்டு பெற 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள்ளும் கார்டு பெறாவிடில் நடிக்க அனுமதி மறுக்கப்படும்.
2.சிறு கதாபாத்திரங்களிலும் உறுப்பினர்களே நடிக்க வேண்டும்:ஏஜெண்டுகளுக்குக் கட்டுப்பாடு.
ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டுகள் (Junior Artist Agents) கூட்டத்தை (Crowd) மட்டுமே வழங்க வேண்டும்; வசனம் பேசி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஆட்களை அனுப்பக் கூடாது. மருத்துவர், வழக்கறிஞர் போன்ற ஒரு நாள், இரண்டு நாள் வரக்கூடிய சிறு கதாபாத்திரங்கள் என்றாலும், அதில் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3.கூடுதல் நேரப் பணிக்கு கூடுதல் ஊதியம்:ஒப்பந்த நேரம்: காலை 9 to இரவு 9.
சின்னத்திரை படப்பிடிப்பு நேரம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே. சில சூழ்நிலைகளில் பணி நீட்டிக்கப்பட்டு, இரவு 12 மணி வரை வேலை செய்ய நேர்ந்தால் அரை நாள் கூடுதல் ஊதியமும் (Half-day pay), நள்ளிரவு 2 மணி வரை நீடித்தால் இரட்டிப்பு ஊதியமும் (Double pay) வழங்கப்பட வேண்டும்.
4.நடிகர் உதவியாளர்களுக்கான புதிய கட்டுப்பாடு:பிரத்யேக அடையாள அட்டை.
சமீபகாலமாக நடிகர்களின் உதவியாளர்கள் (Helpers/Assistants) தொடர்பாகப் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இதனைச் சீரமைக்க, உதவியாளர்களின் ஆதார் விவரங்களைச் சேகரித்து, சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் அவர்களுக்கு ஒரு பிரத்யேக ‘டேக்’ (Tag/அடையாள அட்டை) வழங்கப்படும். இந்த டேக் வைத்துள்ள உதவியாளர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
சின்னத்திரை நடிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், படப்பிடிப்பு தளங்களில் முறையான ஒழுங்குமுறையைக் கொண்டு வரவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைவர் பரத் தெரிவித்துள்ளார்.

