மும்பை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, மத்திய ஆளும் பாஜக அரசை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி மிகக் கடுமையாக வி விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’ (Saamana) பத்திரிகையின் தலையங்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“அயோத்தி ராமர் கோவிலில் ‘கோவில் மேம்பாடு’ என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதை இந்த நாடு தற்போது நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கோவிலின் உண்டியலில் இருந்த காணிக்கைப் பணம், தங்கம், வெள்ளி மற்றும் நகைகள் ஆகியவை மிக மோசமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராமர் கோவிலுக்காகப் பல கார சேவகர்கள் தங்களது இரத்தத்தைச் சிந்தி, தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், அந்தப் புனிதமான கோவிலையே பாஜக தற்போது கொள்ளையடித்துள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற சோமநாதர் கோவிலை கஜினி முகமது எப்படி கொள்ளையடித்தாரோ, அதேபோல பாஜகவினர் ராமர் கோவிலைக் கொள்ளையடித்துள்ளனர்.”
மேலும், “ராமர் கோவிலின் உண்டியல் பணம் திருடப்பட்டிருப்பது நாட்டின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதைக் காட்டுகிறது. ராமர் கோவிலையே பாதுகாக்க முடியாதவர்கள், மகாராஷ்டிராவின் அம்பாபாய் கோவிலை மேம்படுத்துவது பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?” என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ள சாம்னா, “நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் பல முக்கியக் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளையர்கள் அனைவரும் பாஜகவிற்குள்ளேயே, அமித் ஷாவின் மடியில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
பின்னணி என்ன? அயோத்தி ராமர் கோவிலின் உண்டியல் காணிக்கைகளில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, உத்தரப் பிரதேச பாஜாக அரசு இந்த விவகாரத்தை விசாரிக்க ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்துள்ளது. இந்தச் சூழலில், உத்தவ் சிவசேனா இத்தகைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

