தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக பாஜகவின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்திகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி பயணம் மற்றும் தீவிர ஆலோசனை திங்கட்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட அண்ணாமலை, அங்கு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்சி தொடங்குவாரா? தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “தயவுசெய்து காத்திருங்கள், இரண்டு நாட்களில் உட்கார்ந்து பேசுவோம்” என்று அண்ணாமலை மர்மமாகப் பதிலளித்துள்ளார். இது அவர் புதிய அரசியல் கட்சி அல்லது தனிப்பட்ட அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கப்போகிறார் என்ற யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளது. கோயம்புத்தூரில் அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட சுவரொட்டிகளும், அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

பின்னணி என்ன? கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக பாஜகவின் முகமாகத் திகழ்ந்த அண்ணாமலைக்கும், கட்சியின் சில முக்கிய முடிவுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவுடனான கூட்டணி மற்றும் 2026 தேர்தலில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது போன்ற காரணங்கள், அவர் கட்சியில் இருந்து விலகும் முடிவுக்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு தேசியவாதக் கொள்கையை முன்வைத்து அவர் புதிய பாதையில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

அண்ணாமலையின் இந்த இரண்டு நாள் காலக்கெடு முடிந்த பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version