புதுடெல்லி: இந்திய வரலாற்றில் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25 அன்று அப்போதைய காங்கிரஸ் அரசால் அவசர நிலை (Emergency) பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தத் தினம் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படுவதால், ஆண்டுதோறும் ஜூன் 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ (Samvidhan Hatya Diwas) ஆகக் கடைப்பிடிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது. இதன்படி, இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய தியாகிகளுக்குத் தங்களின் அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மிகக் கொடூரமாக முடக்கப்பட்ட இந்த நாளை, ஜனநாயகப் படுகொலையின் கறுப்பு அத்தியாயமாக பாஜாக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

“அதிகாரப் பசிக்காக நசுக்கப்பட்ட ஜனநாயகம்” – பிரதமர் மோடி காட்டம்

இன்றைய தினத்தின் முக்கியத்துவம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:

“இன்றைய நாள் (ஜூன் 25) இந்திய வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நமக்கு நினைவூட்டுகிறது. கடந்த 1975-ல் இதே நாளில் தான், அதிகாரப் பசிக்காக நாட்டின் உன்னதமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகம் அடியோடு நசுக்கப்பட்டு அவசரநிலை திணிக்கப்பட்டது. அப்போது சிறைக்கொடுமைகளை அனுபவித்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய அனைத்து தியாகிகளுக்கும் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.” – பிரதமர் நரேந்திர மோடி

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், “காங்கிரஸ் கட்சி செய்த வரலாற்றுப் பிழையையும், அதனால் லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்த கொடுமைகளையும் இளைய தலைமுறை எப்போதும் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நாள் ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ அனுசரிக்கப்படுகிறது” என்று தங்களது கண்டனக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

நாடு தழுவிய அளவில் நிகழ்வுகள்:

அவசரநிலைக் காலத்தில் ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விபரங்களை உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் நினைவஞ்சலி கூட்டங்கள் நாடு முழுவதும் உள்ள பாஜக தலைமை அலுவலகங்களில் இன்று காலை முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் கடைப்பிடிக்கப்படுவதால், நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த காரசார விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version