தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா (AI 2379) விமானம் நடுவானில் திடீரென 300 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தின் ஆரம்பத்தில் விமானி போதைப்பொருள் சோதனையில் சிக்கியது பேசுபொருளானாலும், தற்போது விசாரணையில் வெளியாகி இருக்கும் தொழில்நுட்பக் காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விசாரணையில் வெளிவந்த உண்மைகள்:
- ஹைட்ராலிக் அழுத்தம் குறைவு: ஏர்பஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆரம்பகட்ட ஆய்வில், விமானத்தின் மூன்று தனித்தனி ஹைட்ராலிக் அமைப்புகளிலும் ஒரே நேரத்தில் அழுத்தம் தற்காலிகமாகக் குறைந்துள்ளது.
- செயலிழந்த கட்டுப்பாட்டுப் பகுதிகள்: இந்த திடீர் அழுத்தக் குறைவு காரணமாக, விமானத்தின் முக்கியக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் (Flight Control Surfaces) சில விநாடிகள் செயல்படாமல் முடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
- தொழில்நுட்பக் கோளாறே காரணம்: விமானி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், விமானம் திடீரென தாறுமாறாகச் சுழன்று உயரத்தை இழந்ததற்குப் பின்னால் கடுமையான தொழில்நுட்பக் கோளாறு இருந்திருக்கக்கூடும் என்பதை இந்த முதற்கட்ட ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை ஆணையம் (AAIB) மற்றும் வான்வெளித் துறையினர் தீவிர விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

